Tuesday, 29 October 2019

உலக சிக்கன தினம்! இஸ்லாமிய பார்வையில்

ஒரு குறிப்பிட்ட தினத்தை தேர்வு செய்து  தந்தையர் தினம் அன்னையர் தினம் மகளிர் தினம் நண்பர்கள் தினம் என பல தினங்கள் கொண்டாடப்படுகிறது
அந்த வரிசையில் தான் இன்று உலக சிக்கன தினம்


இஸ்லாம் இது போன்ற விடயங்களை எவ்வாறு பார்க்கிறது என்பதை நாம் ஆராய்வோம் ஒரு குறிப்பிட்ட தினத்தை குறிப்பிட்டு அன்று மட்டும் அந்த விடயங்களை அனுசரிப்பதை இஸ்லாம் கண்டிக்கிறது


தினமும் நமக்கு அன்னையர் தினம் தான் தாயை மதிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லிக் கொடுக்கிறது தினமும் நமக்கு தந்தையர் தினம் தான் தந்தையை எவ்வாறு மதிக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது அது போல் ஒவ்வொரு நாளும் எந்தெந்த தினங்கள் அனுசரிக்கப்படுகின்றனவோ அவை அனைத்தையும் நாம் தினமும் கடைபிடிக்க வேண்டியது அவசியமானது ஆகும்


இன்று உலக சிக்கன தினமாம்

சரி இஸ்லாம் சிக்கனத்தை பற்றி எவ்வாறு கூறுகிறது என்பதை நாம் ஆராய்வோம் உதாரணத்திற்கு சாப்பாட்டை எடுத்துக் கொண்டோமானால் கால் வயிறு சாப்பிட்டு அரை வயிறு எடுத்து வைப்பது சிக்கனம் அல்ல வயிறார சாப்பிட்டு வீண்விரயம் செய்யாமல் இருப்பதே சிக்கனமாகவும்

மேலும்......

சிக்கனம் என்பது பணத்தை மட்டும் குறிப்பதல்ல மாறாக, அல்லாஹ்வின் அருட்கொடைகளை பயன்படுத்துவதிலும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

தற்போதைய காலகட்டத்தில், பணம் மற்றும் பொருட்களை சேமிப்பதைவிட இயற்கை வளங்களை பாதுகாப்பதும் அவற்றை சிக்கனமாக செலவு செய்வதும் நம் அனைவரின் கடமையாக இருக்கிறது.

தண்ணீர், உணவு பண்டங்கள், இயற்கை வளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தேவைக்கு உட்பட்டே செலவு செய்ய வேண்டும். “மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக வரலாம்’ என்பது அறிஞர்கள் கருத்தாக உள்ளது.


அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்: “உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில், அல்லாஹ் அளவு கடந்து வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (திருக்குர்ஆன் 7:31)


தேவைக்கு அதிகமாக செலவு செய்வதும் வீண் விரயமாகவே கருதப்படும். இன்று நாம் பார்க்கிறோம், நம் நாட்டில் திருமணம் போன்ற விசேஷங்களில், அளவுக்கு அதிகமான உணவுகள் வீணடிக்கப்படுகின்றன. சாப்பிடும் தட்டுகளில் ஒருபக்கம் வீணாகிறது என்றால், மறுபக்கம், உணவு பரிமாற தயாராகும் பகுதிகளில் உணவுப்பொருட்கள் வீணாகிறது.


உணவு வீணாவதைப்பற்றி எவ்வித கவலையும் யாருக்கும் இல்லை. ஆனால், ஒருவேளை உணவு இன்றி இந்த உலகத்தில் வாழ்பவர்கள் எண்ணிக்கை பல கோடிகளை தாண்டுகிறது.


உணவு தயாரிப்பவர்களுக்கும், பரிமாறுபவர்களுக்கு உணவு சிக்கனத்தைப்பற்றி நாம் அறிவுறுத்த வேண்டும். அரிசி தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு என இயற்கை வளங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். எனவே, நாம் மிக கவனமாக இயற்கை வளங்களை கையாளவேண்டும்.


இஸ்லாம் ஒருபோதும், வீண்விரயத்தை விரும்புவதில்லை. அடுத்த தலைமுறைக்கு நாம் சொத்துகளை விட்டுச் செல்ல வேண்டும். சொத்துகள் என்பது பணம் மற்றும் வீடுகள் மட்டுமல்ல இயற்கை வளங்களும்தான்.


அல்லாஹ் தன் திருமறையில், ‘காற்றை சூல் கொண்டதாக நாமே அனுப்புகிறோம். பின்னர் வானிலிருந்து நீர் பொழிவித்து அதனை உங்களுக்கும் புகட்டுகிறோம், நீங்கள் அதனை சேமித்து வைப்போராய் இல்லை’ (15: 22) என்று குறிப்பிடு கிறான்.


தண்ணீரை சேமிக்காததால் இறைவனின் கோபமும் நம்மீது விழுகிறது. இறைவனை வணங்குவதற்கு முன்பு செய்யப்படும் ‘ஒளு’ (கை, கால்களை தண்ணீரைக்கொண்டு கழுவி சுத்தம் செய்வது) செய்யும்போது கூட தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அப்போது அங்கிருந்த தோழர் ஒருவர், ‘தண்ணீர் தான் நிறைய இருக்கிறதே’ என்று கூற, அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘பொங்கி வழியும் நதிக்கரையாயிருந்தாலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என்று அருளினார்கள் என்றால், தண்ணீர் சிக்கனத்தின் அவசியத்தை நாம் உணரவேண்டும்.


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் அருந்தியபின், ‘இறைவா! நீயே புகழுக்குரியவன், உன்னுடைய தனிப்பெரும் கருணையால்தான் நீ எங்களுக்கு சுவையான தண்ணீரை வழங்குகின்றாய். எங்கள் பாவங்களை நீ மனதில் கொண்டிருப்பாயானால், நீ உப்பு கரிக்கும் நீராகவும், கசப்பான நீராகவும் ஆக்கியிருப்பாய்’ என்று பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.



தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துபவர்களாகவும், இறைவனுக்கு நன்றி செலுத்துபவர்களாகவும் நாம் இருப்போம்,

அதேபோல் மின் சிக்கனம் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு, 200 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. மின்சாரம் இல்லாமல் சில மணி நேரம் கூட நம்மால் இருக்க முடியாது என்ற அளவிற்கு அதன் முக்கியத்துவம் உள்ளது.

மின்சாரம் என்பது வற்றாத வளம் அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும்; நாட்டுக்கு பெரிய அளவில் செலவு ஏற்படுத்தும் செயல்பாடுகளில், மின் உற்பத்தியும் ஒன்று.

'அவசியத்திற்கு மட்டும் தான் பயன்படுத்துகிறோம்' என்று கூறும் நம்மில் பலரின் அலட்சியத்தால் மின்சாரம் வீணாக்கப்பட்டு பற்றாக்குறை ஏற்படுகிறது.ஒவ்வொரு மின் நுகர்வோரும் குறைந்தது, 40 வாட்ஸ் மின்நுகர்வைக் குறைத்தாலே 1,000 மெகாவாட்ஸ் பற்றாக்குறையைச் சரிசெய்யலாம் என ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் ஆளே இல்லாத அறையில் மின் விசிறி சுற்றிக்கொண்டிருக்கும், மின் விளக்குகள் எரியும். ஆனால், இதை நாம் கண்டுகொள்வதில்லை. மின்வெட்டு சமயங்களில் அரசுகளை திட்டி தீர்க்கும் நாம்; பயன்பாட்டில் பொறுப்பின்றி இருக்கிறோம்.இயற்கை வளங்கள், செயற்கை வளங்கள் எதுவாயினும் அதை சேமிக்கும் வழக்கம் நமக்கு கட்டாயம் வேண்டும்.




நமது முன்னோர்கள் இப்பழக்கத்தை சரியாக செய்தனர். அவர்கள் பணத்தை மட்டுமல்லாமல், பண்டங்களையும் சேமித்தனர். எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, இருக்கும்போதே சேமித்துக்கொள்ளும் பழக்கத்தை, சிறு வயது முதல் ஏற்படுத்த வேண்டும்.

குடும்பத்தில் அனைவரும் சிக்கனமாக இருந்தால் தான் சேமிப்பு உருவாகும். இன்று வரை சிக்கனம் என்றால் என்ன என்று கேட்பவராக இருந்தாலும் பரவாயில்லை. இனியாவது சேமிக்க தொடங்குங்கள். மகிழ்ச்சியாக வாழ்வோம்!. இறையருளைப்பெறுவோம்!

No comments:

Post a Comment