சத்திய மார்க்கத்தை பேணுவோம்
சத்தியம் என்று வருகின்ற போது அதனை ஈமான் கொள்வதும், பின்பற்றுவதும், மனதார ஏற்றுக் கொள்வதும், அதற்கு அடிபணிவதும், அதனைப் பற்றிப்பிடிப்பதும், அதன்பால் அழைப்பு விடுப்பதும், அதற்கு உதவி புரிவதும், அதற்காக வேண்டி வாதிடுவதும் எமது கடமையாகும்.
எனவே, முஸ்லிமான ஒருவன் சத்தியத்தைத் தேடிப்பெற்றுக் கொள்வதற்கும், அதனை ஏற்றுச் செயல்படுவதற்கும், அது எங்கிருந்து கிடைத்தாலும் மனத்திருப்தியுடன் அங்கீகரிப்பதற்கும் முன்வரக் கூடியவனாக இருப்பான்.
மாறாக, வழிகேடர்களைப் பொறுத்தளவில் அவர்கள் சத்தியம் விடயத்தில் பல பிழையான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றனர். சிலர் சத்தியத்தை மறைக்கக் கூடியவர்களாகவும், இன்னும் சிலர் சத்தியத்துடன் அசத்தியத்தை கலக்கக் கூடியவர்களாகவும், மேலும் அசத்தியத்தைக் கொண்டு மாற்று விளக்கம் கூறக்கூடியவர்களாகவும், பல விளக்கங்களுக்குத் தோதுவாக அமையக்கூடிய ஆதார வரிகளை தேடிப் பின்பற்றக் கூடியவர்களாகவும், ஆதாரங்களை அதற்குரிய இடத்தில் பிரயோகிக்காமல் முறைதவறிய அமைப்பில் பயன்படுத்தக்கூடியவர்களாகவும், அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவுடைய வாசனங்களுடன் விளையாடக்கூடியவர்களாகவும், வழிதவறிய விடங்களுக்கு நற்பெயர்களை சூட்டி அலங்கரித்துக் காட்டக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
எனவே, சத்தியத்தைப் பற்றியும், அதனை விட்டும் திசைதிருப்பக்கூடிய அம்சங்களைப் பற்றியும் பேசுவது காலத்தின் தேவையாகும். ஏனெனில், இவ்விடயத்தில் ஒருவர் ஈடேற்றத்தைக் காண்பது மிகச் சிரமமாகும்.
சத்தியத்தை விட்டும் திசைதிருப்பக்கூடிய காரியங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை நாம் இப்போது பார்ப்போம்.
1.அநியாயம் செய்தல்
நாம் அநியாயம் செய்யக்கூடியவர்களாக இருந்தால் அதன் காரணமாக அல்லாஹ் எங்களை விட்டும் சத்தியத்தை தூரப்படுத்துவான். இது குறித்து சுமார் 10க்கு மேற்பட்ட இடங்களில் அல்லாஹ் வெளிப்படையாகக் கூறியுள்ளான். எடுத்துக்காட்டாக:
மேலும் அல்லாஹ் அநியாயம் புரியக்கூடிய கூட்டத்தாருக்கு நேர்வழி காட்டமாட்டான்.
(அல்மாயிதா: 258)
மேலும், இதே கருத்தில் இடம்பெறக்கூடிய சில வசனங்களைப் பார்க்க வேண்டும் என்றால் பின்வரும் வசனங்களை வாசித்துப் பாருங்கள்!
ஆலு இம்றான்: 86, மாயிதா: 51, அன்ஆம்: 144, தவ்பா: 19, 109, கஸஸ்: 50, அஹ்காப்: 10, ஜுமுஆ: 5, ஸப்: 7
எனவே, அநியாயத்தை விட்டும் விலகியிருக்கும் வரை எம்மை சத்தியம் நெருங்கமாட்டாது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
2. அறியாமை
இப்பண்பு அனைத்து வகையான பாவங்களுக்கும் அடிப்டையாகக் காணப்படுகின்றது. யார் ஒரு விடயத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லையோ அவர் அது தொடர்பான அறிவுக்கு எதிரியாக மாறிவிடுவார் என்பது எதார்த்தமானது. அதன் அடிப்படையிலேயே எம் சமூகத்திற்கு மத்தியில் பல சத்தியத்திற்குரிய அம்சங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இவ்வடிப்படையைப் பற்றி அல்லாஹுத்தஆலா பின்வருமாறு கூறுகிறான்.
குர்ஆனாகிய அதன் அறிவைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள முடியாததைப் பொய்யாக்குகின்றனர்
(யூனுஸ்: 39)
ஷேஹுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “மனிதர்களை விட்டும் நுபுவ்வத்துடைய ஒளி துண்டிக்கப்பட்டுவிட்டால், அவர்கள் பித்னாவுடைய இருளில் வீழ்ந்து விடுவார்கள். மேலும், அவர்களுக்கு மத்தியில் பித்அத்கள், பாவமான காரியங்கள் மற்றும் தீங்கான அம்சங்கள் நிகழ்ந்துவிடும்.
(மஜ்மூஉல் பதாவா: 17/310)
இதற்கான பரிகாரம்: மார்க்கத்தை நல்ல முறையில் கற்று எம் மத்தியில் காணப்படும் அறியாமையை போக்குவதாகும்.
இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் அமல்களில் மிகச் சிறந்தது எதுவெனக் கேட்கப்பட்ட போது: “அறிவு” என்றார்கள். அப்போது கேள்வி கேட்ட அம்மனிதர், அதே கேள்வியை மீண்டும் கேட்க, அந்நபித்தோழரும் அதே பதிலை அளித்துவிட்டு அம்மனிதரை நோக்கி, “உனக்கு நாசம் உண்டாகட்டும்! நிச்சயமாக அல்லாஹ்வைப் பற்றிய அறிவுடன் குறைவான அறிவும், கூடுதலான அறிவும் உனக்குப் பிரயோசனமளிக்கும். மேலும், அல்லாஹ்வைப் பற்றிய அறிவீனத்துடன் குறைவான அறிவும், கூடுதலான அறிவும் உனக்கு பிரயோசனமளிக்க மாட்டாது” என்றார்கள்
ஸுனனுல் பைஹகி)
3. கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல்.
சத்தியம் எதுவென்று தேடிப்பார்க்காமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதை எச்சரித்து அல்லாஹுத்தஆலா பல அல்குர்ஆன் வசனங்களை இறக்கி வைத்துள்ளான். எடுத்துக்காட்டாக,
மேலும், அவ்வாறே உமக்கு முன் எந்தவொரு கிராமத்திற்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோரில் ஒருவரை அனுப்பிய போதும் அவர்களிலுள்ள வசதி படைத்தவர்கள் அவரை நோக்கி: நிச்சயமாக எங்களுடைய மூதாதையினரை ஒரு வழியில் இருக்க நாங்கள் அடைந்து கொண்டோம். மேலும், நிச்சயமாக நாங்கள் அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்பவர்களாக இருக்கின்றோம் என்று பதிலளிப்பார்கள்”.
(அஸ் ஸுஹ்ருப்: 23)
எனவே, இத்தகைய தடைக்கல்லுக்கு சிறந்த சிகிச்சையாக, நாங்கள் எப்பொழுதும் மார்க்க விடயங்களை ஆதாரத்தோடு எடுக்கக்கூடியவர்களாக மாற வேண்டும்.
4. மன இச்சையைப் பின்பற்றுதலும் உள்ளத்தின் தீர்ப்பை அமல் படுத்துவதும்.
மன இச்சையைப் பின்பற்றுவது தொடர்பாகப் பல தடைகள் அல்குர்ஆன் அஸ்ஸுன்னா நெடுகில் பதிவாகியுள்ளன. அந்தவிதத்தில் அல்லாஹுத்தஆலா பின்வருமாறு கூறுகிறான்
“நீர் மன இச்சையைப் பின்பற்றாதீர்! (அவ்வாறு பின்பற்றுவீரென்றால் அதன் காரணமாக) அல்லாஹ்வுடைய பாதையைவிட்டும் அது உன்னை வழிதவறச் செய்து விடும்”
(ஸாத்: 26)
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகின்றார்கள்:
“ஜாஹிலிய்யாக் காலத்தில் ஒருவர் வெண்ணிறக் கல்லை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வணங்கிவருவார். அதனை விட மிக அழகானதொரு கல்லைக் காணும் போது இரண்டாவது கண்ட கல்லை வணங்க ஆரம்பிப்பார். முதலாவதை விட்டுவிடுவார்”.
(இப்னு கஸீர்: 6/113)
இது தான் மன இச்சையைப் பின்பற்றுதலின் எதார்த்த நிலையாகும்.
மேலும், இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
“மன இச்சையைப் பின்பற்றுபவரை அவருடைய மன இச்சை குருடனாகவும் செவிடனாகவும் மாற்றிவிடும்”.
(மின்ஹாஜுஸ் ஸுன்னா அந்நபவிய்யா: 5/176)
No comments:
Post a Comment